Wednesday, 12 July 2017

தமிழக பள்ளிக் கல்வித்துறை மாற்றங்களை முன்னெடுப்போம்

தமிழக பள்ளிக் கல்வித்துறை பரபரப்பாக இயங்கத் தொடங்கியிருப்பதையும் அளப்பரிய மாற்றங்களை முன்வைத்து புதுமெருகு ஏற்றிக் கொண்டு வருவதையும் அனைத்துத் தரப்பினரும் பெருமகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர் என்பது பழைய செய்தி.
கல்வியாளர்களின் சமூகச் செயற்பாட்டாளர்களின் பன்னெடுங்கால விமர்சனங்களையும் கருத்துகளையும் உள்வாங்கி பள்ளிக் கல்வித்துறை இம்மாற்றங்களை முன்னெடுத்துள்ளது.

இம்மாற்றங்களை எதிர்கொள்வதிலும் அதற்குத்தக வினையாற்றுவதிலும் ஆசிரியர்களின் பங்கு என்ன என்பதே பெரும் எதிர்பார்ப்புகளைத் தந்துள்ளது.

"தனி மரம் தோப்பாகாது' என்பார்கள். நெடுங்கால வடிவத்தில், பாடத்திட்டத்தில், செயல்முறையில் பழக்கப்பட்டுவிட்ட ஓர் அமைப்பில் புதிய மாற்றங்கள் என்பது கடுமையான முயற்சியாகவே அமையும் என்பதை வரலாறு நமக்குக் கற்பிக்கிறது. கல்வித்துறை இதற்கு ரத்தமும் சதையுமான எடுத்துக்காட்டு.

"சிஸ்டம் சரியில்லை' என்ற விமர்சனமே புதிய சோதனை முயற்சிகளை எதிர்த்துத் தள்ளி விடுகிறது. எனவேதான் துடிப்போடு கல்விச்சாலைகளில் அடியெடுத்து வைக்கும் இளம் ஆசிரியர்கள், தொடக்கத்தில் உற்சாகமாகச் செயல்படுவதும், பிறகு அமைப்பின் கொடுங்கரங்களில் சிக்கிச் சிதைந்து, அமைப்பின் வடிவத்துக்கேற்பத் தங்களை மாற்றிக் கொள்வதும் தொடர்கதையாக உள்ளது. இதற்கு விதிவிலக்குகள் இல்லாமலில்லை.

பணி அனுபவத்தில் மூத்த ஆசிரியர்களிலும் துடிப்போடு, அயராது பரிசோதனை முயற்சிகளையும் ஆக்கப்பூர்வமான முயற்சிகளையும் முன்னெடுக்கும் ஆசிரியர்களும் இல்லாமல் இல்லை.

இப்போது வரலாறு புரண்டு படுத்திருக்கிறது. கல்வித்துறை அமைப்பே பல புதிய மாற்றங்களை முன்வைத்துச் செயல்படத் தொடங்கியிருக்கிறது. இதற்கு ஆசிரியர்கள் எவ்வாறு முகங்கொடுக்கப் போகிறார்கள் என்பது ஆர்வமூட்டும் வினாவாக உள்ளது. இவ்வினாவுக்கான தேடுதலில் விடைகாணும் வாய்ப்பு அண்மையில் அமைந்தது.

பள்ளிக் கல்வித்துறை இடைநிலை கற்றல், பயிற்சி முகாம்களை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மையில் நடத்தியது. நான்கு அல்லது ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த, குறிப்பிட்ட பாடம் சார்ந்த ஆசிரியர்களுக்கு ஐந்து நாட்கள் பயிற்சியளிக்கும் திட்டம் அது.

தமிழகம் முழுவதும் நடைபெற்ற இப்பயிற்சி முகாம்களில் கல்வியாளர்கள், சமூக நோக்கர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் கலந்துகொண்டு ஆசிரியர்களோடு உரையாடவும் உறவாடவும் ஒரு வாய்ப்பைப் பள்ளிக் கல்வித்துறை ஏற்படுத்தியிருந்தது.

திருவண்ணாமலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழாசிரியர்களுக்கான முகாமிலும் நெய்வேலியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறிவியல் ஆசிரியர்களுக்கான முகாமிலும் கலந்துகொண்டு கருத்துரைக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

இரண்டு வேறுபட்ட கருத்தியல் மனோபாவம் சார்ந்த ஆசிரியர்களிடம் உரையாடியபோது, பள்ளிக்கல்வியின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை விசாலமாகியது.

தமிழர் கலை வரலாறு குறித்துத் தமிழாசிரியர்கள் மத்தியிலும் போலி அறிவியலும் நம்பிக்கையும் குறித்து அறிவியல் ஆசிரியர்கள் மத்தியிலும் உரையாடியபோது அவர்கள் காட்டிய உற்சாகம் கருத்துரைக்கும் நம்மையும் தொற்றியது.

குழந்தைகளுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்கள் தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது அவர்கள் எழுப்பிய வினாக்கள் வழியாக வெளிப்பட்டது.

புதியனவற்றை அறியும் தேடலும் அதைத் தங்களது வகுப்பறைகளில் சோதித்துப் பார்க்கும் ஆர்வமும் மிகுந்தவர்களாக ஆசிரியர்கள் இருந்தார்கள் என்பது மகிழ்வளித்தது. இளம் ஆசிரியர்கள் மட்டுமல்ல, பணி அனுபவத்தில் மூத்த ஆசிரியர்களும் உற்சாகத்தோடு இருந்தார்கள். பள்ளிக் கல்வித்துறை முன்னெடுக்கும் மாற்றங்கள் குறித்த பெருமிதம் அவர்களில் வெளிப்பட்டதைக் காண முடிந்தது.

தனியார் பள்ளிகளுக்குச் சவால்விட தங்களால் முடியும் என்றும் இனி அரசுப் பள்ளிகளின் மீது நம்பிக்கை கொண்டு திரும்பும் என்ற எண்ணத்தையும் கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுடனான தனிப்பட்ட உரையாடலில் வெளிப்பட்டது.

தமிழகமெங்கும் இப்பயிற்சி முகாம்களில் கருத்தாளர்களாகக் கலந்துகொண்ட பல எழுத்தாளர்களும், கல்வியாளர்களும் உற்சாகமாக இந்த வெளிப்பாடுகளைப் பகிர்ந்து கொண்டனர். "கல்வித்துறையின் உத்தரவால் கட்டாயம் உட்கார வேண்டியதாகிவிட்டது' என்ற கசப்பான உணர்வு அங்கு வெளிப்படவில்லை.

உரையாடலுக்குப் பிறகும் அரங்கினுள்ளும் அரங்கிற்கு வெளியிலும் கருத்தாளர்களைச் சூழ்ந்துகொண்டு கலைய மனமின்றி ஆர்வத்தோடு பேசிக்கொண்டிருந்த ஆசிரியர்களின் முகங்கள், எதிர்காலக் கல்விக் கனவைத் தேக்கி வைத்திருந்தன.

அமைப்பே கெட்டிதட்டிப் போய் இருக்கிறது என்ற பன்னெடுங்காலக் கருத்து சிதைவுற்று அமைப்பே நெகிழ்வுத் தன்மையோடு உற்சாகமாக முன்னோக்கிப் பாய்கிறது என்பதை ஆசிரியர்கள் மிகவும் ஆரோக்கியமாக உள்வாங்கியுள்ளனர்.

அமைப்பின் அழுத்தத்தால் வீழ்த்தப்பட்டுச் சோர்வுற்றிருந்தாலும் மனசாட்சியின்படி சிறு சிறு ஆக்க முயற்சிகளைச் செய்துவந்த ஆசிரியர்கள் புது உற்சாகத்தோடு வீறுகொண்டு எழுந்திருக்கின்றனர்.

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் ஒவ்வோர் ஆண்டும் பள்ளிக் கல்வித்துறை நடத்தும் இதுபோன்ற பயிற்சி முகாமை ஏற்பாடு செய்து அவர்களையும் ஒருங்கிணைக்கும் பணியினைப் பள்ளிக் கல்வித்துறை செய்ய வேண்டும்.

கல்விசார் பரிசோதனை முயற்சிகளின் படிப்பினைகளை எடைபோட்டுப் பார்க்கும் இடமாகவும் புதிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, அம்முயற்சிகளை முன்னெடுத்துப் போகும் மேடையாகவும் இப்பயிற்சி முகாம்கள் வடிவெடுக்க வேண்டும்.

ஜாக்டோ ஜியோவிற்கு இடைநிலை ஆசிரியர்களின் வேண்டுதல்!!

அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஒன்றிணைந்திருக்கும் இம்மாபெரும் வரலாற்றை நாங்கள் மெய்சிலிர்ப்போடு பார்க்கிறோம் மிக நம்பிக்கையாக உணர்கிறோம். அரசின் கவனம் இப்போதே ஜாக்டோ ஜியோ- வை நோக்கி திரும்பி இருக்கிறது.
அரசு இதையும் அலட்சியம் காட்டினால் தமிழ்நாட்டின் அரசு அலுவல்கள் ஒட்டுமொத்தமாய் முடங்கிப்போய் தமிழ்நாடே அல்லோலகல்லோலப் படவிருக்கிறது இதுவெல்லாம் ஜாக்டோ ஜியோ- வின் கடந்த கால சாதனைகளை வைத்து நிச்சயம் நடக்கும் என நம்பலாம். இம்மாபெரும் அமைப்பான ஜாக்டோ ஜியோ முத்தாய்ப்பான மூன்று கோரிக்கைகளை முன் வைக்கிறது

1) பழைய பென்ஷனை அமல்படுத்த வேண்டும்

2) உடனடியாக ஏழாவது ஊதிய குழுவை அமல்படுத்துவது
( தமிழ்கத்தில் எட்டாவது)

3) 20 சதவீதம் இடைக்கால நிவாரணம்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அடிப்படை வாழ்வாதாரத் தேவைகளாக கருதி இம்மூன்று கோரிக்கைகளையும் மிக கவனமாக தேர்ந்தெடுத்து முன் வைத்திருக்கிறது.

இந்த முத்தாய்ப்பு கோரிக்கைகளுக்கு மிகப்பெரிய சலியூட்டை  ஜாக்டோ ஜியோவிற்கு ஆசிரியர்கள் சார்பாக வைக்கிறோம்.

இன்னுமொரு கோரிக்கையை மிக  சங்கடத்தோடு  மன்றாடி கெஞ்சி ஜாக்டோ ஜியோவிடம் கேட்கிறோம்.

இம்மூன்று கோரிக்கைகளை அரசு உறுதி செய்தி விட்டால் தயவுசெய்து

*இடைநிலை ஆசிரியர்கள் 8 ஆண்டுகளாக புலம்பிக் கொண்டிருக்கும் ஒரே கோரிக்கையான ஊதிய முரண்பாடு கலைதல்* ( 2009 பிறகான இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் 13000 இழப்பு) என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள்..

 ஆசிரியர்கள் என்றும் நன்றி மறவாமல் இருப்போம்..



*நம்பிக்கையோடும் ஏக்கத்தோடும் இடைநிலை ஆசிரியர்கள்*

Friday, 2 June 2017

மத்திய அரசின் 7 வது ஊதியக்குழு அடிப்படையில் தமிழ்நாட்டின் ஆசிரியர்களுக்கு ஊதியநிர்ணயம் செய்யவேண்டும் - நிதித்துறை செயலரிடம் "TNPTF" அளித்த கோரிக்கை முழு விவரம்...

https://drive.google.com/file/d/0B9vI3zgChya6VmZBaXpOc0FXWFk/view?usp=sharing

ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து ராமதாஸ்கோரிக்கை !!

ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் உள்ள முரண்பாடுகளை களைந்து இடைநிலை ஆசிரியர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்
என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இறைவனுக்கு சமமாக மதிக்கப்பட வேண்டிய 
ஆசிரியர்களின் அடிப்படைக் கோரிக்கைகளைக் கூட கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசு நிறைவேற்ற மறுத்து வருவது மிகுந்த வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார்.மேலும், தனது அறிக்கையில் ராமதாஸ் கூறியிருப்பதாவது:
ஒரே வேலை இருவேறு ஊதியம்
ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டபோது தமிழகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டது. ஆறாவது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி மத்திய அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்குரூ.9300 அடிப்படை ஊதியம், ரூ.4200 தர ஊதியம் ஆகியவற்றுடன் 90% அகவிலைப்படி சேர்த்து தொடக்க ஊதியமாக ரூ.27,100 வழங்கப்படுகிறது. அதேநேரத்தில் மாநில அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5200 அடிப்படை ஊதியம், ரூ.2800 தர ஊதியம், ரூ.750 சிறப்பு ஊதியம் ஆகியவற்றுடன் 90% அகவிலைப்படி சேர்த்து ரூ. 17,165 மட்டுமே தொடக்க ஊதியமாக வழங்கப் படுகிறது. அதாவது மத்திய அரசு பள்ளிகளின் ஆசிரியர்களை விட மாநில அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு மாதம் சுமார் ரூ.10,000 குறைவாக ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரே விதமான பணியை செய்யும் மத்திய மற்றும் மாநில அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு இருவேறு ஊதியம் வழங்கப்படுவது சரியல்ல. இது மாநில அரசு ஆசிரியர்களுக்கு செய்யப்படும் துரோகம் ஆகும்.
கிராமத்தில் பணிப்புரிவதால் ஊதிய உயர்வு தேவையில்லை
ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளைக் களையக் கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர் அமைப்புகள் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தியும் அவர்களின் குறைகள் தீர்க்கப்படவில்லை.ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகளில் உள்ள முரண்பாடுகளை களைவது குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க இ.ஆ.ப. அதிகாரி ராஜீவ்ரஞ்சன் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.ஆசிரியர்களின் குறைகளை களைய வேண்டிய அக்குழு, ‘‘ இடைநிலை ஆசிரியர்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் தான் பணியாற்றுகின்றனர்; அங்கு விலைவாசி குறைவாக இருப்பதால் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கத் தேவையில்லை’’என்ற அதிமேதாவித்தனமான பரிந்துரையை அரசுக்கு அளித்தது.அரசும் அதையேற்று ஊதிய உயர்வு அளிக்க மறுத்தது. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் ஜெயலலிதாவும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வில்லை.இதனால் 10 ஆண்டுகளுக்கும் குறைவான பணி மூப்பு கொண்ட சுமார் 35 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 1.2 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.அறிவார்ந்த சமுதாயத்தை ஏற்படுத்துவதில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. எனவே தான் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு இணையான ஊதியம் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.அவ்வாறு இருக்கும் போது மத்திய அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைக் கூட மாநில அரசு ஆசிரியர்களுக்கு வழங்கமறுப்பது கண்டிக்கத்தக்கது.
அரசு கவனிக்க வேண்டும்
ஏழாவது ஊதியக் குழுவும் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், ஆறாவது ஊதியக் குழுவின்பரிந்துரைகளில் உள்ள முரண்பாடுகளை களைந்து இடைநிலை ஆசிரியர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.ஓய்வுக்காலத்தை ஆசிரியர்கள் நிம்மதியாக கழிக்கும் வகையில் புதிய ஓய்வூதியக் கொள்கையை கைவிட்டு, பழைய ஓய்வூதியக்கொள்கையை கடைபிடிக்க வேண்டும் - மருத்துவக் காப்பீட்டுக்கான பிரீமியம் 6 மடங்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், காப்பீட்டையும் இப்போதுள்ள ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

Wednesday, 31 May 2017

அரசு பள்ளிகளில் பணிப்புரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு PG TRB ல் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி ஊதிய முரண்பாட்டை மூடி மறைக்கும் அரசின் முயற்சி!! ஒரு பார்வை...

நேற்று வெளியிடப்பட்ட அரசாணையில் PG TRB ல் 10% இட ஒதுக்கீட்டை இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கியிருக்கிறது.ஊதிய முரண்பாட்டை மிகத்தெளிவாக உணர்ந்து தங்கள் உரிமையை மீட்க போராட்டக்களங்களிலும் சமூக வளைத்தளங்களிலும் தீவிரமாக செயல்பட்டு வரும் 2009 க்கு பிறகான இடைநிலை ஆசிரியர்களை ஈடுக்கட்டும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளதை இந்த அரசாணை ஊர்ஜிதப்படுத்தியுள்ளது.இந்த முயற்சியை பல கோணங்களில் ஆராய்ந்து பார்த்தால் நிச்சயம் இது 2009 பிறகான இ.ஆசிரியர்களை சமாதானப்படுத்தும் முயற்சியாகவே தெரிகிறது.எனவே அரசுக்கு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு தொடர்பான அனைத்து தகவல்களும் போயிருப்பதாகவே தெரிகிறது.இதை கருத்தில் கொண்டே அரசு அரசாணையை வெளியிட்டிருக்கிறது.
 இது கண்டிப்பாக 2009 க்கு பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மட்டுமே பயன்படும் காரணம் 2009 க்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர்களின் ஊதியமான(9300-4800) மற்றும் அகவிலைப்படி இவற்றை சேர்த்து மொத்த ஊதியத்தை விட அதிகமாகவே தற்போது பெறுகிறார்கள் ஆனால் 2009 பிறகான இ.ஆசிரியர்களின் ஊதியத்தின் நிலைமை நாம் யாவரும் அறிந்ததே! 
ஆகவே எனதருமை இ.ஆசிரிய தோழர்களே அரசின் இந்த அறிவிப்பாணை நமக்கெல்லாம் சிறதளவு மகிழ்ச்சி தான் எனிலும் அரசின் இந்த ஈடுசெய்யும் முயற்சியை நாம் கவனமாக உற்றுநோக்க வேண்டும்.நாம் ஊதிய முரண்பாடில்லாமல் நமக்கான ஊதியமான (9300-4200) அப்போதே பெற்றிருந்தால் இப்போது முதுகலை ஆசிரியர்களின் மொத்த சம்பளத்தை விட 10 ஆயிரம்கூடுதலாக பெற்றிருப்போம்.
எனவே தமிழக அரசை நம் கல்வித்தகுதிக்கான ஊதியத்தை தருமாறு வேண்டும் போராட்டங்களை இன்னும் தீவிரமாக முன்னெடுப்போம் வாருங்கள்.நமக்கு போராட்டத்தை பற்றி சிந்திக்கும் எண்ணத்தை மாற்றி தேர்வு பற்றி சிந்திக்கும் எண்ணத்தை அரசு உருவாக்கியிருப்பதை தயவுசெய்து உணர்ந்துக்கொள்க.
இந்த அரசாணை வேண்டும் தான் இ.ஆசிரியர்களுக்கு
( 9300-4200) கொடுத்தப்பிறகு இந்த அரசாணை வேண்டும் தான்.....

இந்த அரசாணை ஏன் இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்குகிறது?
பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏன் 10%வழங்க வில்லை? 
காரணம் இது தான் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கும் இடையில் சம்பள வேறுபாடு வெறும் ரூ 200.ஆனால் இ.ஆசிரியர்களுக்கும்(2009 பிறகான) மு.ஆசிரியர்களுக்கும் இடையில் சம்பளவேறுபாடு 13000/-
பட்டதாரி ஆசிரியர்களுக்கு இது தேவையில்லை காரணம் அவர்களின் சம்பளம் மு. க.ஆ- க்கு நிகரானது.பாதிக்கப்பட்ட இ.ஆ- களுக்கு இந்த வாய்ப்பை வழங்குவோம் என அரசு முடிவெடுத்திருக்கிறது.எனவே நம் பாதிப்பை அரசு உணர்ந்துவிட்டதை
அரசுக்கு நம் இழப்பு தெரிந்து விட்டதை இதன் மூலம் மிகத்தெளிவாக உணரலாம்...

தொடக்க கல்வித்துறை கலந்தாய்வில் மாற்றங்கள் : ஆசிரியர்கள் வரவேற்பு !!

தொடக்க கல்வித்துறை கலந்தாய்வில் மாற்றங்கள் : ஆசிரியர்கள் வரவேற்பு
தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கான, மாவட்டங்களிடையே பணிமாறுதல் கலந்தாய்வில், இந்தாண்டு பின்பற்றப்பட்ட புதிய மாற்றங்களை ஆசிரியர்கள் வரவேற்றனர்.


 தொடக்க கல்வியில், இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கான பணி மாறுதல் கலந்தாய்வில் இம்முறை, 'ஒரு மாவட்டத்தில் இருந்து மாறுதல் கேட்ட 
ஆசிரியர் வேறு மாவட்டத்தில் ஒரு இடத்தை தேர்வு செய்யும்போது ஏற்கெனவே அவர் இருந்த இடம் 'காலி' என அடுத்த நொடியில் ஆன்லைனில் காண்பிக்கப்படும் முறை அமல்படுத்தப்பட்டது.

அதேபோல் மண்டலம் 'ஏ', 'பி', 'சி', 'டி', என மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, கலந்தாய்வில் விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் மட்டுமே பணி மாறுதல் கோர முடியும் என்ற நிலை இருந்தது. இந்த நடைமுறையும் மாற்றப்பட்டு, எந்த மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களிலும், காலி இடங்களை ஆசிரியர்கள் தேர்வு செய்யலாம் என பின்பற்றப்பட்டது.

பழைய முறையில் கலந்தாய்வு ஒரே நாளில் நடக்கும். இதனால் நள்ளிரவு, அடுத்த நாளை தாண்டி கலந்தாய்வு தொடரும். ஆனால், இந்தாண்டு சீனியாரிட்டி அடிப்படையில் முதல் நாளில் ஒன்று முதல் ஆயிரம், இரண்டாம் நாளில் 1000 முதல் 2000 பேர், அதற்கு மேல் உள்ளவர்கள் மூன்றாவது நாள் என மூன்று கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்பட்டது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், செயலாளர் உதயசந்திரனின் இந்த முயற்சி, ஆசிரியர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த மாற்றங்கள் குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வில் பின்பற்றப்படும் முறை வரவேற்கத்தக்கது. முந்தைய கலந்தாய்வில், ஒரு மாவட்டத்தில் எதிர்பார்த்த பணியிடம், சீனியாரிட்டி அடிப்படையில் வேறு ஒருவர் எடுத்து விட்டால், அடுத்த வாய்ப்பு இருக்காது என கலந்தாய்வு அறையை விட்டு ஆசிரியர் வெளியேறி விடுவர். அந்த இடங்கள் மறைக்கப்பட்டு, பின் பல லட்சம் ரூபாய் பேரம் பேசப்படும்.

ஆனால் தற்போதைய நடைமுறையில், அந்த மாவட்ட ஆசிரியர், வேறு மாவட்டத்திற்கு மாறுதலாகி சென்றால், அவரது காலி இடம் அடுத்த நொடியில் ஆன்லைன் கலந்தாய்வில் காண்பிக்கப்படுகிறது. இதனால் அடுத்தடுத்த வாய்ப்பு ஆசிரியர்களுக்கு கிடைக்கிறது, என்றனர்.

பலிபீடத்தின் கருணை !! ( இடைநிலை ஆசிரியர்களே சிந்தீப்பீர் )

பலிபீடத்தின் கருணை !! ( இடைநிலை ஆசிரியர்களே சிந்தீப்பீர் )

நண்பர்களே... இடைநிலை ஆசிரியர்களுக்கு PG TRB இல் 10% இடஒதுக்கீடு என்ற நேற்றைய அறிவிப்பால் உணர்ச்சிவசப்பட்டு  அகமகிழ்ந்திட வேண்டாம்.....

யாருமே கேட்காத போது  ஏன் இந்தஇடஒதுக்கீடு?

 கடந்த ஆறாவது ஊதியக்குழுவில் மிகவும் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய இழப்பை சரிசெய்ய பத்தாண்டுகளாக அனைத்து ஆசிரியர் சங்கங்களும் போராடி வரும் நிலையில் அடுத்த ஊதியக்குழுவில்
இந்த வேறுபாடு களையப்படும் என்ற குறைந்தபட்சநம்பிக்கையோடு இடைநிலை ஆசிரியர்கள் காத்துக் கொண்டிருக்கையில் அரசின் தன்னிச்சையான இந்த  அறிவிப்பு வரப்போகும் பேராபத்துக்கு கட்டியம் கூறுகிறது. இடைநிலை ஆசிரியர் ஊதிய விகிதத்தில் இருக்கும் ஆசிரியர்கள் என்று குறிப்பிட்டு கூறுவதால் ஊதிய விகிதத்தை மாற்றியமைத்து நேர்செய்யும் எண்ணத்தில் அரசு இல்லை என்பது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. அடுத்த ஊதியக்குழு பரிந்துரை எப்படி அமையும் என்பதற்கு இது சான்றளிக்கிறது. அடுக்கிய மூட்டையில் அடிமூட்டையாய் வீழ்ந்து கிடக்கும்  இடைநிலை ஆசிரியர்களின் வேதனையை தீர்க்காமல் PG TRB இடஒதுக்கீடு என்று ஆசை காட்டி ஏமாற்ற அரசு துணிந்துள்ளது. அதுவும் UG அல்ல; PG மட்டும். இடைநிலை ஆசிரியர் நிலையில் உள்ள பிற ஆசிரியர் என்று சொன்னாலும் ஓவிய, தையல், உடற்கல்வி ஆசிரியர்கள் போன்ற சிறப்பாசிரியர்களுக்கு PG இல் என்ன வாய்ப்புள்ளது? ஓரிரு இடைநிலை ஆசிரியர்களுக்கு சில வாய்ப்புகளை தந்து விட்டு ஊதிய கோரிக்கையை கைகழுவப் பார்க்கிறது. இதில் மயங்கி கிடந்தால் வாழ்நாள் முழுவதும் இடைநிலை ஆசிரியர்கள் மீண்டெழவே முடியாது. ஒன்றுபட்ட போராட்டமே இழந்த ஊதியத்தை மீட்டெடுக்கும்...
இல்லாத அரசின் கருணையை எதிர்பார்த்துக் கையேந்தி நின்று கொண்டிருக்கப் போகிறோமா? தட்டிப் பறித்த உரிமைகளை எட்டிப் பிடிக்க கரமுயர்த்தி முன்னேறப் போகிறோமா?

ஊழியர்களின் நலன்மீது
அரசின் அக்கறை எந்தளவு இருக்கிறது என்பதை சமீபத்திய போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் நமக்கு  தெளிவுபடுத்தியுள்ளது. நம்மிடம் பிடித்த CPS உள்ளிட்ட தொகையைக் கூட கொடுக்க முன்வராத அரசாங்கம் நமது ஊதிய முரண்பாட்டை நமக்கேற்றவாறு வழங்க முன்வருமா?

இடைநிலை ஆசிரியர்கள் வாழ்வாதாரம் காக்க ஆசிரியர் சமூகம் ஒன்றுபட்டு களமிறங்க வேண்டியது அவசியம். அவசரமும்கூட...  ஆசிரிய சங்கங்களே விரைவாக அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுங்கள்....

(இந்த ஊதியக்குழு என்னஅபாயங்களை யாருக்கு வழங்க உள்ளதோ? )



இன்று நாம் போராட வீதிக்கு வராவிட்டால் வருங்காலம் நம்மை இழுத்து வந்து தெருவில் நிறுத்தும்...

- விஜி, கிருஷ்ணகிரி.

தமிழக பள்ளிக் கல்வித்துறை மாற்றங்களை முன்னெடுப்போம்

தமிழக பள்ளிக் கல்வித்துறை பரபரப்பாக இயங்கத் தொடங்கியிருப்பதையும் அளப்பரிய மாற்றங்களை முன்வைத்து புதுமெருகு ஏற்றிக் கொண்டு வருவதையும் அனைத்த...